“ஆதிதிராவிடர் என்ற சொல் சாதிகளை கடந்தது!” - ரவிக்குமார்

“ஆதிதிராவிடர் என்ற சொல் சாதிகளை கடந்தது!” - ரவிக்குமார்
Published on

எழுத்தாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், தன் மணிவிழாவைக் கொண்டாடுகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்விலும் எழுத்துலகிலுமாக இயங்கிவருபவரிடம் அந்திமழை சார்பாக சில கேள்விகள்:

உங்கள் தத்துவார்த்த அரசியல் பயணத்தில் விசிக இணைந்த புள்ளி எது?

பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் என்ற எனது கருத்தியல் பயணம்,  இந்த மூன்று சிந்தனைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் விடுதலைச்

சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல் திருமாவளவன் அவர்களைப் பார்த்தபோது அவருக்கு உறுதுணையாக அவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என முடிவெடுப்பதற்குக் காரணமாக அமைந்தது. மனித உரிமை களத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலான எனது களப்பணிகள் தலித் மக்களின் உரிமைகளுக்கான களப்பணிகளில் என்னைக் கொண்டு போய் நிறுத்தியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நான் இணைந்தது இப்படித்தான்  தர்க்கபூர்வமாக அமைந்தது.

நீங்கள் சட்டமன்ற, நாடாளுமன்றப் பங்கேற்பை விமர்சித்த இடமும் அதில் மூழ்கி முத்தெடுக்க முடியும் என்கிற இடமும் ஒரே பாதையா... முரண்பட்ட புள்ளிகளா? எப்படி?

தேர்தல் அரசியலை விமர்சிக்கும்  நிலைப்பாட்டில் இருந்த நான் மிகுந்த தயக்கத்தின் ஊடாகவே தேர்தல் அரசியலில் பங்கேற்றேன்.

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் என்னைப்போட்டியிடுமாறு தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் வலியுறுத்திய போது நான் அதை மறுத்து விட்டேன். மீண்டும் 2006ஆம் ஆண்டு அவர் என்னை வேட்பாளராக அறிவித்த போது மறுக்க முடியவில்லை. இதனிடையே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தேர்தல் அரசியலை, நாடாளுமன்றத்தைப் பயன்படுத்திய அனுபவங்கள் எனக்கு இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் குறித்த புரிதலை ஏற்படுத்தின. பேச்சுவார்த்தைக்கு இங்கே ஒரு இடம் இருக்கிறது. சட்டமன்றத்தை, நாடாளுமன்றதைப் பயன்படுத்தி ஒரு சிறு அசைவு ஏற்படுத்தினாலும் அதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற உதவ முடியும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அதை மனதில் கொண்டுதான் செயல்பட்டேன். ஆறு நல வாரியங்கள் அமைவதற்கு நான் முன்வைத்த கோரிக்கைகள் காரணமாக இருந்தன . குடிசை வீடுகளை மாற்றி 21 லட்சம்  கான்கிரீட் வீடுகள் அமைப்பதற்கான மாபெரும் திட்டமும் எனது கோரிக்கையின் அடிப்படையில் தான் அறிவிக்கப்பட்டது. இவற்றால் பல லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். ஐந்தாண்டு கால

சட்டமன்றப் பணிகள்மூலம் பல லட்சம் பேரின் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றால் அது பெரிய விஷயம் என்றே நான் கருதுகிறேன். அதைச் செய்ய முடிந்ததில் மிகுந்த மனநிறைவு எனக்கு உள்ளது.

அதுபோலத்தான் நாடாளுமன்றத்திலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் படிப்பு உதவித்தொகை ஆறு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் படுவதற்கும், அதனால் சுமார் நாலரை கோடி மாணவர்கள் பயன் பெறுவதற்கும் நானும் எமது தலைவரும்  எடுத்த முயற்சிகளே காரணம். அண்மையில் பாஜக அரசு கொண்டுவந்த மீன்பிடி மசோதா மீது இடையீடு செய்து அதில் மீனவர்களுக்குப் பாதுகாப்பாக பல்வேறு மாற்றங்களை செய்ய வைத்திருக்கிறேன். இதுவும் ஒரு முக்கிய குறுக்கீடாக நான் கருதுகிறேன். மாநில உரிமைகள் தொடர்பாகவும், சிறுபான்மையினர், பெண்கள் உரிமைகள் தொடர்பாகவும் இதுவரை எவரும் எழுப்பாத பல கோரிக்கைகளை நாடாளுமன்றத்தின் மூலம் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறேன்.  இது போல் பல விஷயங்கள் நான் மேற்கொண்ட முன்னெடுப்புகளால் நிகழ்ந்துள்ளன.

எதேச்சதிகாரம், பாசிசம் என உலகளாவிய அரசுக் கோட்பாடுகள் பற்றி எழுதியும் பேசியும் வருகிறீர்கள். இதற்கு எதிரான ஒற்றுமையைப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

தற்போதைய பாஜக அரசு கும்பல் ஆட்சி முறையிலிருந்து கொடுங்கோன்மையை நோக்கி எவ்வாறு பயணிக்கிறது என்பதை நூலாகவே நான் எழுதி வெளியிட்டு இருக்கிறேன். அது கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை விமர்சித்து உடனடியாக இந்திய மொழிகளில் வெளியான முதல் நூல் என்னுடையதுதான். இந்த அரசின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது ஜூனியர் விகடனில்  கட்டுரைகளாக எழுதி வருகிறேன். மனித உரிமை செயற்பாட்டாளராக இருந்த காரணத்தால் பாஜக அரசு ஒவ்வொரு தளத்திலும் மேற்கொண்டுவரும் அதிகாரத்துவ நடவடிக்கைகளை என்னால் கூர்மையாக அவதானிக்க முடிகிறது. எமது கட்சியின் சார்பில் தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் பரந்துபட்ட ஒற்றுமையை உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இடதுசாரி கட்சிகளோடும், சமூக நீதியை முன்னெடுக்கும் கட்சிகளோடும் நாங்கள் ஏற்படுத்தி வரும் தோழமை என்பது எமது கருத்தியல் உறுதிப் பாட்டுக்கு சான்று பகரும்.

சமகால அரசியல் நிலவரத்தில் பெரியாரியத்தின் பங்கு என்னவாக இருக்கமுடியும்?

சனாதன பயங்கரவாத அரசியல் மேலோங்கி இருக்கும் இந்த சூழலில் அதற்கு எதிரான சமூக நீதி அரசியலை வலுப்படுத்த வேண்டிய தேவை முதன்மை பெற்றிருக்கிறது. இதில் பெரியாரியத்தின் பங்கு கணிசமானது. ஆனால் இந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு மார்க்சியம் மட்டும் போதும், அம்பேத்கரியம் மட்டும் போதும், பெரியாரியம் மட்டும் போதும் என்று சொல்ல முடியாது. இந்த சிந்தனைகள் எல்லாவற்றிலிருந்தும் தற்போதைய சூழலுக்குப் பொருத்தமான கூறுகளை நாம் திரட்டி எடுத்து அவற்றை நவீன சிந்தனைகளோடு இணைத்து நமக்கான நடைமுறை உத்திகளை வகுக்க வேண்டும். அரசு, அதிகாரம், பண்பாட்டு மேலாதிக்கம் முதலானவை குறித்த சிந்தனைகளை முன் வைத்திருக்கும் தத்துவ அறிஞர்களின் கருத்துகள் நமக்கு பயன்படக்கூடியவை.  அந்த வகையில் பின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிற தத்துவ அறிஞர்களிடமிருந்தும் நான் பல கருத்துகளை உள்வாங்கி இருக்கிறேன். குறிப்பாக எட்வர்ட் ஸெய்த், மிஷேல் ஃபூக்கோ, எலியா கனெட்டி, பியர் பூர்தியூ முதலானவர்களைக் கூறலாம். உலகளாவிய எதிர்ப்பு இயக்கங்களிடமிருந்தும் நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த விதத்தில் இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஆப்பிரிக்க அமெரிக்க எதிர்ப்பு இயக்கங்கள், பெண்ணிய இயக்கங்கள் யாவற்றிலிருந்தும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய நல்ல பல அம்சங்கள் இருக்கின்றன. அதனை சுட்டுவதற்காகவே மால்கம் எக்ஸ், பாப் மார்லி முதலானோரின் வாழ்க்கை வரலாறுகளை நான் நூல்களாக எழுதி வெளியிட்டு இருக்கிறேன். தமிழ் சூழலில் நான் அறிமுகம் செய்த தலித் வரலாற்று மாதம்,  தலித் கலைவிழா முதலான நடவடிக்கைகள் அவ்வாறு கற்றுக் கொண்டதன் விளைவுகள்தான். ஈழப் பிரச்னையிலும் எனது நிலைப்பாடு, செயல்பாடு இந்த உலகளாவிய உணர்வுத் தோழமையின் அடிப்படையில் அமைந்ததுதான்.

வங்கி ஊழியரான உங்களைப் பொதுவாழ்க்கைக்கு உந்தித் தள்ளியது எது?

பொது வாழ்க்கை என்பது எனது மாணவப் பருவம் தொட்டு  இருந்து வந்ததுதான். சிறு வயது முதலே நான் பெரியாரிய அரசியலால் ஈர்க்கப்பட்டவன்.  1976 ஆம் ஆண்டு பூம்புகாரில் நான் பியூசி படிக்கும்போது அங்கே மாணவர்களிடையே ஏற்பட்ட சாதி அடிப்படையிலான மோதல் என்னை ஒரு அடையாளத்துக்குள் தள்ளியது.  தவிர்க்கமுடியாமல் நான் அதுதொடர்பான காவல் நிலைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதாயிற்று. அதைத்தொடர்ந்து அவசரநிலை காலம் முடிந்து அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தலில் ஜனதா கட்சியை ஆதரித்து சுவரெழுத்து உட்பட பிரசாரப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அதன் பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.படிப்பில் சேர்ந்தேன். அந்த அரசியல் பணி களப்பணியாகத்  தொடர ஆரம்பித்தது. 1976 இல் ஆரம்பித்த எனது அரசியல் செயல்பாடுகள் இந்த  நாற்பத்தேழு ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆதிதிராவிடர்களாய் ஒன்றிணைவோம்   என சில நேரங்களில் எழுதுகிறீர்கள்... பா.ம.க. ஒரு காலத்தில் முன்வைத்த திரட்சியைப்போன்றதுதானா இதுவும்?

சனாதனப் பயங்கரவாதிகள் எஸ்சி எஸ்டி பிரிவினரை, ஓபிசி பிரிவினரை பல்வேறு சாதிகளாகக் கூறு படுத்தி அவர்களது எண்ணிக்கை பலத்தை குறைத்து மீண்டும் தமது மேலாதிக்கத்தை நிறுவுகிறார்கள். உத்தரப்

பிரதேசத்தில் பயன்படுத்தி வெற்றிகண்ட அதே உத்தியைத்  தமிழ்நாட்டிலும்  பயன்படுத்துகிறார்கள். அதற்கு எதிராகத்தான் ஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறேன். சனாதன பயங்கரவாதத்திலிருந்து எஸ்சி மக்களை பாதுகாப்பதற்கான  முழக்கம் அது. உள் ஒதுக்கீட்டுக்கானதோ, சாதி அடிப்படையிலானதோ அல்ல. இந்தியாவில் சாதி அடையாளங்களைக் கடந்து, சாதியற்ற ஒரு தன்னிலை அடையாளமாக நூறு ஆண்டுகளுக்கு முன்பே முன்வைக்கப்பட்டது தான் ஆதிதிராவிடர் என்ற அடையாளம். அது எந்த சாதியின் பெயரும் கிடையாது,  சாதிகளைக் கடந்த சொல் அது.

கவிதை, மொழிபெயர்ப்புகளைத் தாண்டி, இரவிக்குமார் என்றால் ஆய்வாளர் என்பதில் தொய்வு ஏற்பட்டுவிட்டதாக  விமர்சிக்கப்படுகிறதே... தனிப்பட்டு அதில் உங்களுக்கு நாட்டம் இல்லாமல் போய்விட்டதா?

ஆய்வுப் பணிகளை நான் ஒருபோதும் குறைத்துக் கொண்டதில்லை.  சொல்லப்போனால் முன்பைவிட எனது ஆய்வுப்பணிகள் அதிகரித்திருக்கின்றன என்பதே உண்மை. கடந்த 12 ஆண்டுகளாகத் தமிழியல் ஆய்வுகளுக்காக மணற்கேணி என்ற ஆய்விதழை நடத்தி வருகிறேன். பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற ஆய்வு இதழ் அது. வரலாற்றுக்கென போதி  என்ற ஆய்விதழை மாத இதழாக நடத்தி வருகிறேன். இதுவரை தமிழில் அறியப்படாத பல வரலாற்று அறிஞர்களின்  படைப்புகளை அதில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்வதோடு,  தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்ட பல ஆளுமைகளின் பணிகளையும் பதிவு செய்து வருகிறேன். அதில் விரிவான பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

காவிரி பிரச்சனை, குடியுரிமை திருத்த சட்ட பிரச்னை, நீதித்துறையின்செயல்பாடுகள் என பல ஆய்வு நூல்களை கடந்த மூன்று ஆண்டுகளில் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.   எனது மணி விழாவின்போது வெளியிடப்பட்ட எட்டு நூல்களில் ‘தலித்துகளும் நிலமும்‘ என்ற ஆய்வு நூலும் ஒன்று. மணிவிழா நிகழ்வில் பேராசிரியர் அ. இராம சாமி, பேராசிரியர் க. பஞ்சாங்கம், எழுத்தாளர் இமையம் ஆகிய மூவரும் என்னைப்பற்றி எழுதிய மூன்று நூல்களும் வெளியிடப்பட்டன.  அம்பேத்கரின் தொகுக்கப்படாத பல எழுத்துக்களை தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். முனைவர்  பட்டத்துக்காக நான் மேற்கொண்ட ஆய்வு, கல்வெட்டியல், தொல்லியல், கலை வரலாறு, வாய்மொழி வரலாறு என பல தரவுகளையும் பயன்படுத்தி நந்தன் என்ற தொன்மத்தைக்  கட்டுடைப்பு செய்துள்ளது. அது ஜூலையில்  நூலாக வெளிவர இருக்கிறது.

ஜூலை, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com